தொலைவில் இருக்கும்
மகனின் நினைவுகள்
அருகில்காணும் சித்திரங்களாய்
வந்தமர்கின்றன.
அவனோடு
பழகிப்போன
பூங்காவை
நாட்கள் கழிந்து
காணச் செல்கிறேன்.
சிறிது நடக்கையில்
“அப்பா” என்றதொரு விளிகேட்டு
விழித்தமர்கிறேன்
நிசப்தத்தில்.
அவன் விரும்பி
ஆடும்
மகிழ் ஊஞ்சல்
எவரும் இல்லாதிருக்கிறது
இன்று.
நினைவுகளின் நெருக்கத்தில்
வீடு திரும்புகையில்
எல்லா ஊஞ்சல்களிலும்
ஆட்டம்
துவங்கிற்று
இப்போது.
ஒற்றை ஊஞ்சலில்
ஒய்யாரமாய் ஆடி உயரும்
ஒர் குழந்தையின்
காட்சி
தூரத்திலிருப்பவனின்
சாயலென
சுவைத்து
கனத்த
நினைவுகள் தாங்கி
கடுக்கத்
துவங்கிவிட்டன
கால்கள்...
- மனோகர் ஞானசமுத்திரம்
(c) manoharggs@gmail.com
2 comments:
உணர்ந்து கவிதையை ரசிக்க முடிந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்ற்ங்க. முதல் வாழ்த்து உங்களுடையதுதான்.
Post a Comment