Tuesday, April 8, 2014

ஐஸ்கிரீம் இதயங்கள்!

கண்களில்
பொத்தல் விழுந்து
கால் ஒடிந்த
ஆசை பொம்மை வேண்டி
அடம்பிடித்து அழுகிறது
குழந்தை.


***
உடைத்தும்
ஊனமாக்கியும்
காயப்படுத்தும் அன்பையே
நோக்கி மாயும்
ஐஸ்கிரீம் இதயங்கள்!



- மனோகர் ஞானசமுத்திரம்
(c) manoharggs@gmail.com

Monday, April 7, 2014

காயங்கள் காணுதல்


பக்கத்துவீட்டு ப்ளஸ் டூ மாணவி
புதிதாக வாங்கியிருந்த 
ஸ்கூட்டரை
ஓட்டிப் பழகினாள்.

தேர்வுகள் இன்னும்
முடியவில்லைதான்.
ஓட்டிய வேகத்தில்
தெருமுடுக்கில் திருப்புகையில்
சறுக்கிவிட்டாள்.

வண்டிக்கடியில் சிக்கியவளின்
அழுகுரலில் மொய்த்த பெருசுகள்.
ஞானப் போதனைகளுடன்
அவளைக் கீற ஆரம்பித்தனர்.

“தேர்வு முடியவில்லை கவனமாக
இருக்க வேண்டாமா?
“இவளுக்கு என்ன பரபரப்பு?
“யாரைப் பார்க்கணும்னி இந்த வேகம்?
“பொண்ணுங்கனா அடக்கம் வேணும்.
காயங்களுக்குள் பாய்ந்தன
அம்புகள் பல.

“நான் ஓடிபோயி கடையில 
மருந்து வாங்கிட்டு வரட்டா?” 
என்றான்
பக்கத்துவீட்டு சிறுவன்.

இனியாவது காயங்களைக்
காணத் துவங்கலாம்.
.

 - மனோகர் ஞானசமுத்திரம்
(c) manoharggs@gmail.com


















Tuesday, April 1, 2014

சண்டைக்கோழி


காதல் செய்தபோது
முழுமூச்சாய் தடுத்தும்
பொந்தனே பொருத்தமானவனென்று
சாதித்தாள் பக்கத்துவீட்டு
ஒல்லிப்பொண்ணு.

பிடிவாதத்துடன் மணமேடை ஏறியவள்,
நேற்றிரவு அடைமழையில்
விடாத வீட்டு ஒழுக்குபோல
அவனிடம் சண்டையிட்டுக்கொண்டிருந்தாள்.

 அழகானவன் என்ற ஆராதனையின்றி
பொந்தன் என்று வதைக்கும்
அவளின் வார்த்தைகள்.

அடிகள் விழுந்திருக்கக்கூடும்.
அடங்காத அழுகை. விடாத மழை.
சுவர்களைத் தாண்டி நியாயம் கேட்டது
விசும்பல்கள்.

மழையொழுக்கு நின்றிருக்கிறது.
எப்போதாவது பொலபொலவென
ஓட்டுத் துளிகள் சில.

ஒருவேளை
இடைவேளையாய் இருக்கலாம்.

- மனோகர் ஞானசமுத்திரம்
(c) manoharggs@gmail.com