Saturday, March 29, 2014

பூ பூக்கும் காலம்


பூக்கும் காலங்களாயிருந்த
நாட்களில் நேசங்கள்
கொண்டாடின.

சுற்றிலும் மலர்கள்
கூடி நின்று
நேசமொழி பேசிக்கொண்டிருந்தன.
கனாக்களில் பறந்து
நிமிடங்கள் மறந்தன.

வண்ணங்கள் சிதறி
வாசங்கள் சூழ
நேசங்கள் வளர்ந்ந்துகொண்டன.

மழைநாட்களில் நனைந்தும்
ஒதுங்கியும்
காத்து நின்றிருந்தன கணங்கள்.

பூக்களற்ற இந்நாட்களில்
புல்தரையெங்கும்
விரிந்து அடர்ந்து நிற்கிறன
நேசத்திற்கான
நினைவுகள்.

- மனோகர் ஞானசமுத்திரம்
(c) manoharggs@gmail.com

Thursday, March 20, 2014

குட்டி பூனை

ரோட்டைக் கடக்கும்போது
பூனைக் குட்டியொன்று
நடுவில் நின்றிருந்தது.
மல்லிகைப் பூப்பந்தையொத்த
வெள்ளை மென்மை உடல்வாகும்
பளிச்சென கண்களும்
கவர்வதாயிருந்தது.

எதிரே வாகனங்கள்
சிக்னலுக்காக காத்திருந்தன.
மாட்டிக்கொள்ளுமே என்றெண்ணி
விரட்ட துவங்கும்போதெல்லாம்..
விலகிக்கொள்வதும் மீண்டும்
மத்தியில் நின்றுகொள்வதுமாக
மகிழ்ந்திருந்தது.
ஏதோ ஆகிவிடுமோவென
மனம் பதைத்து கடக்கையில்
சிக்னல் விழுந்ததும்
'வீல்' குரல்!


- மனோகர் ஞானசமுத்திரம்
(c) manoharggs@gmail.com
Wednesday, March 19, 2014

நிமிர்ந்து நிற்போம்!


நான் நெடுநாளாக தமிழ் திரைப்படங்களை பார்ப்பதில்லை. பொங்கல் வெளியீடு திரைப்படங்களை நான் பார்த்தபோது அவைகளில் கதையம்சம் அவ்வளவாக இல்லை. முன்னணி நடசத்திரங்கள் நடித்திருந்த அந்த இரண்டு படங்களிலும் கதை சரியாகப் பின்னியிருக்கவில்லை. வன்முறையில் தீர்வு என்றபடியே அமைந்திருந்தன. அதுவே மக்களுக்கு சொல்லப்பட்ட செய்தியாக இருந்திருக்கும்.

அடுத்தாற்போல் காதலர் தினத்தில் வெளியான இது கதிர்வேலன் காதல் படம் பார்த்தபோது உதயநிதி ஸ்டாலின் வன்முறையை படத்திலிருந்து தூக்கி எறிந்திருக்கிறார். குடும்பமாய் எல்லோரும் பார்க்கும் ஒரு காதல் கதையாய் அமைந்திருந்தது.

சமீபத்தில் சசிகுமாரின் பிரம்மன் திரைப்படமும் நல்ல கதையம்சத்துடன் வந்திருந்தது.

சமுத்திரக்கனியின் “உன்னை  நீ சரிசெய்துகொள் உலகம் தானாக சரியாகிவிடும்என்ற ஒற்றைவரி முழக்கத்தைத் தாங்கி வந்த நிமிர்ந்து நில் திரைப்படம் எனக்கு பிடித்திருந்தது. முதல் பாதியில் டைரக்டர் நம் மனசாட்சியுடன் பேசுகிறார். மிகவும் சிரம்பபட்டு நேர்த்தியாய் படத்தை உருவாக்கி நிமிர்ந்து பார்க்க செய்கிறார். கனியின் இலட்சிய படமாக இது எடுக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். ஒவ்வொரு நகர்வும் சமுதாய மாற்றத்துக்கான தேடுதலை நம் முன் வைக்கிறது. 

படத்தின் பின் பாதியில் தவறு நடந்துவிட்டது என்று நான் சொல்வதற்கில்லை. மற்றவர்களுக்காக கனி தன் வேகத்தை வியாபரத்திற்காக, பொழுதுபோக்கு அம்சத்திற்காக காம்ப்ரமைஸ் செய்துகொண்டிருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது.

கனி ஜெயம் ரவியை நன்றாக செதுக்கியிருக்கிறார். இளம் புயலாகவே வெளிப்படுகிறார். கனி சொல்லவந்த செய்தி படத்தில் இறுதிவரை திசைமாறவில்லைதான். பார்வையாளர்களாக இருக்கும் மக்கள் தேசத்தை உருமாற்றம் செய்ய பங்களிப்பவர்களாக மாறவேண்டும் என்ற ஆதங்கத்தை உணரும்படியான செய்தி மக்களை வெற்றியுடன் சென்றடைந்திருக்கிறது.

Tuesday, March 18, 2014

நாளை உலக சிட்டுக்குருவி தினம்!


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், உடன்குடி சந்தையடியூரைச் சேர்ந்தவர் கோவில்பிச்சை. இவரது மகன் ஜேசுராஜ்(வயது 21). இவரது தங்கை தனீஷ்(வயது 18). கல்லூரியில் பயிலும் இருவருக்கும் உயிரினங்கள், பறவைகள் மீது மிகுந்த பிரியம் கொண்டவர்கள். தற்சமயம் அழிந்து கொண்டிருக்கும் உயிரினமான சிட்டுக்குருவிகளை அழிவின் விளிம்பில் இருந்து மீட்க இருவரும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். இதற்காகவே அண்ணன்தங்கை இருவரும் கல்லூரியில் விலங்கியல் பாட பிரிவை தேர்ந்தெடுத்து படித்து வருகின்றனர்.


 மேலும் நாளை மார்ச் 20–ந்தேதி சிட்டுக்குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி இவர்கள் இருவரும் சிட்டுக்குருவிக்கென கூடுகள் தயாரித்து இலவசமாக வீடுகள், கடைகளுக்கு கொடுத்து வருகின்றனர். இது பற்றி ஜேசுராஜ், தனீஷ் இருவரும் கூறும் போது, 15 வருடங்களுக்கு முன்பு வீடுகள் பெரும்பாலும் ஓடுகள் வைத்து கட்டப்பட்டிருக்கும். மேலும் அதிக அளவில் மக்கள் கிணற்று நீரை பயன்படுத்தியதால் கிணறுகள் அதிகமாக இருக்கும். தற்காலத்தில் வீடுகள் அனைத்தும் கான்கிரீட் வீடுகளாகவும், கிணறு என்பது இல்லாமலும் போய் விட்டது. இதனால் சிட்டுக்குருவிகள் வாழ்விடம் இழந்து தவிப்பதை நாங்கள் இருவரும் உணர்ந்தோம்.

சிட்டுக்குருவிகளுக்கான வாழ்விடத்தை மீட்டுக் கொடுக்க செயல்படுவது என சபதம் செய்தோம். அதன்படி 100க்கும் மேற்பட்ட செயற்கையான கூடுகளை நாங்கள் உருவாக்கினோம். இவற்றை அக்கம் பக்கம் வீடுகள், கடைகளுக்கு கொடுத்து சிட்டுக்குருவி பற்றிய விழிப்புணர்வும், அவற்றைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கி வருகிறோம். உயிரினங்களின் வாழ்விடத்தை மீட்டுக்கொடுப்பதில் உயிர் உள்ள வரை போராடுவோம் என்றனர்.

 மேலும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்ததற்கான காரணங்கள் குறித்தும் விளக்கினர். அதன்படி பூச்சிக்கொல்லிகள், அயல் தாவரங்கள் பெருகிவிட்டதன் காரணமாக குருவி குஞ்சுகளுக்கு முக்கிய உணவான புழுக்கள் கிடைப்பதில்லை. முதல் 15 நாளைக்கு குருவிக்குஞ்சுகளின் முக்கிய உணவு இந்தச் சிறு புழுக்கள்தான். அது இல்லையென்றால், குஞ்சுகள் வளர்வது தடைபட்டுவிடும். வீட்டைச் சுற்றி உள்ள தாவரங்கள் மற்றும் தோட்டங்களில்தான் சிட்டுக்குருவிகள் சிறிய புழுக்களைத் தேடும். இன்றைக்கு அப்படிப்பட்ட தோட்டங்கள் நகரங்களில் இல்லை. பெரும்பாலான கிராமங்களிலும் இல்லை.

வீட்டுத் தோட்டங்கள், வயல்கள், செடிகள், பயிர்களின் மீது பூச்சிக்கொல்லி தெளிப்பதால் பூச்சிகள், சிறு புழுக்கள் இறந்து விடுகின்றன. பூச்சிக்கொல்லியால் தானியங்களும் நஞ்சாகின்றன. இது சிட்டுக்குருவிகளை பாதிக்கிறது. தானியங்களும் அரிசியும் சாக்கு மூட்டைகளுக்கு பதிலாக, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுவதால் வளர்ந்த சிட்டுக்குருவிகள் உண்ணத் தேவையான தானியங்கள் எங்குமே சிதறுவதில்லை.

 நவீனக் கட்டடங்களில் குருவிகள் கூடு அமைப்பதற்கான வசதியில்லை. ஓட்டு வீடுகள், சுவரில் பொந்து, இடைவெளி வைத்து கட்டப்பட்ட வீடுகளில் தான் குருவிகள் வழக்கமாக கூடுகட்டும். குருவிகள் ஓய்வெடுக்கும் வேலிப் புதர்ச் செடிகளுக்குப் பதிலாக சிமெண்ட் சுவர்களும், இரும்பு வேலிகளும் தற்போது போடப்படுகின்றன.

 இப்படிச் சிட்டுக்குருவி வாழ்வதற்கு ஏதுவாக இருந்த நடைமுறைகள் அனைத்தும் தழைகீழாக மாறியதால், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை நகர பகுதிகளில் குறைந்து விட்டது. ஆனால், அந்த இனமே அழிவுக்கு சென்றுவிட்டதாக கூறும் எந்த ஆதாரமும் இல்லை. உலக சிட்டுக்குருவி தினமான நாளை 20ம் தேதி அன்று சிட்டுக்குருவி இனத்தை வாழ வைக்க மக்களாகிய நாமும் உறுதுணையாக இருப்போம்.

@ மாலைமலர்


Monday, March 17, 2014

தொலைவு நினைவுகள்...


தொலைவில் இருக்கும்
மகனின் நினைவுகள்
அருகில்காணும் சித்திரங்களாய்
வந்தமர்கின்றன.
அவனோடு பழகிப்போன
பூங்காவை
நாட்கள் கழிந்து 
காணச் செல்கிறேன்.
சிறிது நடக்கையில்
அப்பா” என்றதொரு விளிகேட்டு
விழித்தமர்கிறேன் 
நிசப்தத்தில்.

அவன் விரும்பி
ஆடும்  மகிழ் ஊஞ்சல்
எவரும் இல்லாதிருக்கிறது
இன்று.

நினைவுகளின் நெருக்கத்தில்
வீடு திரும்புகையில்
எல்லா ஊஞ்சல்களிலும்
ஆட்டம் துவங்கிற்று 
இப்போது.
ஒற்றை ஊஞ்சலில்
ஒய்யாரமாய் ஆடி உயரும்
ஒர் குழந்தையின் காட்சி
தூரத்திலிருப்பவனின்
சாயலென சுவைத்து
கனத்த நினைவுகள் தாங்கி
கடுக்கத் துவங்கிவிட்டன 
கால்கள்...

- மனோகர் ஞானசமுத்திரம்
(c) manoharggs@gmail.com