Thursday, August 21, 2014

தெய்வம் வேண்டுகிறது!

புனித நூல்கள்
திறந்து வைக்கப்பட்டிருந்தன.
தீபங்களும்
ஒளிர்ந்து கொண்டிருந்தன....
வண்ண ஓவியங்கள்
அழகு சொரூபங்கள்
ஒளி வெள்ளத்தில்
மினுங்கி
தெய்வீகத்தைத்
தந்து கொண்டிருந்தன!

நறுமண வாசனைக்
கமழ்ந்து
இசை முழங்கும்
அதிர்வில்
வெண்பளிங்கு திருபீடத்தில்
பிரசன்னமாகிவிட்டது
தெய்வம்!

அருளில் நனைந்து
பரவசமாய் எழுந்த
பக்தனிடம்,
“இன்று மலர்ந்த
உன் இதயத்தின்
பரிசுத்த பூக்கள்
வேண்டும்.”
என்றது தெய்வம்!

இவன் செவிகளில்
விழவே இல்லை!

(c) manoharggs@gmail.com

Tuesday, August 12, 2014

குருசும் குருதியும்...



(ஈராக் கிறிஸ்தவர்கள் கொன்றழித்து சூறையாடப்படுகிறார்கள் - செய்தி)



குருசு சுமந்தவரைத்
தலையாய்க் கொண்டு
குருதியில் குளிக்கும்
சமாதான புறாக்கள்
இவர்கள்!

தூயபேதுரு பாறையில்
விசுவாசம் பயின்று
ஓசான்னா பாடிய
குயில்கள்
ஓலமிடுகின்றன
இந்நிமிடத்திலும்!

ஆயுதம்தாங்கியவர்களின்
“மதம் மாறு,
உன் ஈன உயிர்காத்திடு”
மிரட்டலுக்கு அஞ்சாது
தங்களை
சிதைக்க சித்தங்கொண்ட
சிலுவைப் போராளிகள்!

சிந்தி சிதறும் மாசற்றவர்
இரத்தம்
தீவிரநோய்கொண்ட
கருங்காடையர்களின்
ஆன்மாக்களைக்
கழுவட்டும்!

திறந்திருக்கும்
துயர் காயங்கள்
நடுங்கும் நிர்வாணங்கள்
உறையும் மௌனங்கள்
உயிர்த்தவருக்கு சாட்சியாய்
'சவுல்'கள்
'பவுல்'களாகிட
பிரார்த்திக்கட்டும்!


Friday, August 1, 2014

இன்னொரு தேடல்...

டலலை கரையேறி
உரக்கச் சொல்வதின் பொருளறிய
தினமும் காத்திருப்பவனின்
மனம் புதிரானது!
காற்றலை அடங்கிய அமைதியில்
வாழத் துவங்கும் அவன் கட்டும்
சொப்பனத்துக் கோபுரங்கள்
கடல்புறாக்களையும்
கவர்ந்துவிட்டன.
பின்பொரு கணத்தில்
பொலபொலவென வீழ்ந்துபோயிற்று
பறவைகளின் சிறகடிப்பில்.
அடிவானமெங்கும் அவன் தாகித்துத் தேடிய
கடற்கன்னி உயிர்த்தெழுந்த பின்
மேகங்களுக்குள் மறைந்துவிட்டாள்.
இன்னொரு தேடல்
சாத்தியமில்லையெனினும்
கவிந்த இருளில்
காத்திருந்தான் அவன்.