Friday, August 1, 2014

இன்னொரு தேடல்...

கடலலை கரையேறி
உரக்கச் சொல்வதின் பொருளறிய
தினமும் காத்திருப்பவனின்
மனம் புதிரானது!
காற்றலை அடங்கிய அமைதியில்
வாழத் துவங்கும் அவன் கட்டும்
சொப்பனத்துக் கோபுரங்கள்
கடல்புறாக்களையும்
கவர்ந்துவிட்டன.
பின்பொரு கணத்தில்
பொலபொலவென வீழ்ந்துபோயிற்று
பறவைகளின் சிறகடிப்பில்.
அடிவானமெங்கும் அவன் தாகித்துத் தேடிய
கடற்கன்னி உயிர்த்தெழுந்த பின்
மேகங்களுக்குள் மறைந்துவிட்டாள்.
இன்னொரு தேடல்
சாத்தியமில்லையெனினும்
கவிந்த இருளில்
காத்திருந்தான் அவன்.

No comments: