Monday, April 7, 2014

காயங்கள் காணுதல்


பக்கத்துவீட்டு ப்ளஸ் டூ மாணவி
புதிதாக வாங்கியிருந்த 
ஸ்கூட்டரை
ஓட்டிப் பழகினாள்.

தேர்வுகள் இன்னும்
முடியவில்லைதான்.
ஓட்டிய வேகத்தில்
தெருமுடுக்கில் திருப்புகையில்
சறுக்கிவிட்டாள்.

வண்டிக்கடியில் சிக்கியவளின்
அழுகுரலில் மொய்த்த பெருசுகள்.
ஞானப் போதனைகளுடன்
அவளைக் கீற ஆரம்பித்தனர்.

“தேர்வு முடியவில்லை கவனமாக
இருக்க வேண்டாமா?
“இவளுக்கு என்ன பரபரப்பு?
“யாரைப் பார்க்கணும்னி இந்த வேகம்?
“பொண்ணுங்கனா அடக்கம் வேணும்.
காயங்களுக்குள் பாய்ந்தன
அம்புகள் பல.

“நான் ஓடிபோயி கடையில 
மருந்து வாங்கிட்டு வரட்டா?” 
என்றான்
பக்கத்துவீட்டு சிறுவன்.

இனியாவது காயங்களைக்
காணத் துவங்கலாம்.
.

 - மனோகர் ஞானசமுத்திரம்
(c) manoharggs@gmail.com


















2 comments:

Yaathoramani.blogspot.com said...

அடிபட்ட காயத்தைவிட
வார்த்தை அம்புகளின் காயங்களே
அதிக வலி தருபவை
அதிக நாளும் தொடர்பவை
அம்பெய்வோர் அறிந்தால் நலம்

Anitha Manohar said...

சரியே...நன்றி ரமணி சார்.
காயம் கட்டுவோம்!