Tuesday, March 18, 2014

நாளை உலக சிட்டுக்குருவி தினம்!


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், உடன்குடி சந்தையடியூரைச் சேர்ந்தவர் கோவில்பிச்சை. இவரது மகன் ஜேசுராஜ்(வயது 21). இவரது தங்கை தனீஷ்(வயது 18). கல்லூரியில் பயிலும் இருவருக்கும் உயிரினங்கள், பறவைகள் மீது மிகுந்த பிரியம் கொண்டவர்கள். தற்சமயம் அழிந்து கொண்டிருக்கும் உயிரினமான சிட்டுக்குருவிகளை அழிவின் விளிம்பில் இருந்து மீட்க இருவரும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். இதற்காகவே அண்ணன்தங்கை இருவரும் கல்லூரியில் விலங்கியல் பாட பிரிவை தேர்ந்தெடுத்து படித்து வருகின்றனர்.


 மேலும் நாளை மார்ச் 20–ந்தேதி சிட்டுக்குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி இவர்கள் இருவரும் சிட்டுக்குருவிக்கென கூடுகள் தயாரித்து இலவசமாக வீடுகள், கடைகளுக்கு கொடுத்து வருகின்றனர். இது பற்றி ஜேசுராஜ், தனீஷ் இருவரும் கூறும் போது, 15 வருடங்களுக்கு முன்பு வீடுகள் பெரும்பாலும் ஓடுகள் வைத்து கட்டப்பட்டிருக்கும். மேலும் அதிக அளவில் மக்கள் கிணற்று நீரை பயன்படுத்தியதால் கிணறுகள் அதிகமாக இருக்கும். தற்காலத்தில் வீடுகள் அனைத்தும் கான்கிரீட் வீடுகளாகவும், கிணறு என்பது இல்லாமலும் போய் விட்டது. இதனால் சிட்டுக்குருவிகள் வாழ்விடம் இழந்து தவிப்பதை நாங்கள் இருவரும் உணர்ந்தோம்.

சிட்டுக்குருவிகளுக்கான வாழ்விடத்தை மீட்டுக் கொடுக்க செயல்படுவது என சபதம் செய்தோம். அதன்படி 100க்கும் மேற்பட்ட செயற்கையான கூடுகளை நாங்கள் உருவாக்கினோம். இவற்றை அக்கம் பக்கம் வீடுகள், கடைகளுக்கு கொடுத்து சிட்டுக்குருவி பற்றிய விழிப்புணர்வும், அவற்றைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கி வருகிறோம். உயிரினங்களின் வாழ்விடத்தை மீட்டுக்கொடுப்பதில் உயிர் உள்ள வரை போராடுவோம் என்றனர்.

 மேலும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்ததற்கான காரணங்கள் குறித்தும் விளக்கினர். அதன்படி பூச்சிக்கொல்லிகள், அயல் தாவரங்கள் பெருகிவிட்டதன் காரணமாக குருவி குஞ்சுகளுக்கு முக்கிய உணவான புழுக்கள் கிடைப்பதில்லை. முதல் 15 நாளைக்கு குருவிக்குஞ்சுகளின் முக்கிய உணவு இந்தச் சிறு புழுக்கள்தான். அது இல்லையென்றால், குஞ்சுகள் வளர்வது தடைபட்டுவிடும். வீட்டைச் சுற்றி உள்ள தாவரங்கள் மற்றும் தோட்டங்களில்தான் சிட்டுக்குருவிகள் சிறிய புழுக்களைத் தேடும். இன்றைக்கு அப்படிப்பட்ட தோட்டங்கள் நகரங்களில் இல்லை. பெரும்பாலான கிராமங்களிலும் இல்லை.

வீட்டுத் தோட்டங்கள், வயல்கள், செடிகள், பயிர்களின் மீது பூச்சிக்கொல்லி தெளிப்பதால் பூச்சிகள், சிறு புழுக்கள் இறந்து விடுகின்றன. பூச்சிக்கொல்லியால் தானியங்களும் நஞ்சாகின்றன. இது சிட்டுக்குருவிகளை பாதிக்கிறது. தானியங்களும் அரிசியும் சாக்கு மூட்டைகளுக்கு பதிலாக, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுவதால் வளர்ந்த சிட்டுக்குருவிகள் உண்ணத் தேவையான தானியங்கள் எங்குமே சிதறுவதில்லை.

 நவீனக் கட்டடங்களில் குருவிகள் கூடு அமைப்பதற்கான வசதியில்லை. ஓட்டு வீடுகள், சுவரில் பொந்து, இடைவெளி வைத்து கட்டப்பட்ட வீடுகளில் தான் குருவிகள் வழக்கமாக கூடுகட்டும். குருவிகள் ஓய்வெடுக்கும் வேலிப் புதர்ச் செடிகளுக்குப் பதிலாக சிமெண்ட் சுவர்களும், இரும்பு வேலிகளும் தற்போது போடப்படுகின்றன.

 இப்படிச் சிட்டுக்குருவி வாழ்வதற்கு ஏதுவாக இருந்த நடைமுறைகள் அனைத்தும் தழைகீழாக மாறியதால், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை நகர பகுதிகளில் குறைந்து விட்டது. ஆனால், அந்த இனமே அழிவுக்கு சென்றுவிட்டதாக கூறும் எந்த ஆதாரமும் இல்லை. உலக சிட்டுக்குருவி தினமான நாளை 20ம் தேதி அன்று சிட்டுக்குருவி இனத்தை வாழ வைக்க மக்களாகிய நாமும் உறுதுணையாக இருப்போம்.

@ மாலைமலர்


4 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிட்டுக்குருவியைக் காக்க ஒரு தினம்!
இவ்விரு எதிர்கால சமுதாயத்தின் எடுத்துக்காட்டான சிந்தனைக்கு ஊக்கமளிப்போம்.
என் இளமைக்காலத்தில் இலங்கையில் எங்கும் சிட்டுக்களைக்காணலாம். சில வீடுகளில் கூட சிட்டுக்கள்
கூடுகட்டி இருக்கும். இங்கும் நான் வந்த ஆரம்பக்காலத்தில் எப்போதும் கீச் கீச் சத்தம் நிறைந்தே இருக்கும்.இங்குள்ள மக்கள் குளிர்காலத்தில் பறவைகளுக்கு உணவிடும் பழக்கமுடையவர்கள்.
ஆனால் இன்று நீங்கள் குறிப்பிட்ட காரணங்களுடன் , மிகமுக்கியமாக அலைபேசிக் கதிர்வீச்சால் சிற்ருயிர்களுக்குக் கரு உருவாதலே பாதிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
நீங்கள் குறிப்பிட்ட காரணிகளால் அழிவு இருந்த போதும் அவற்றிலிருந்து ஒரளவு தம்மைக் காக்க இடம் மாறிச் செல்லும் இயல்புடையவை பறவைகள், ஆனால் இந்த கதிர் வீச்சால் அவற்றால் தப்பவே முடியவில்லை. என்பது மிகக் கவலையான விடயம்.
இதிலிருந்து இச்சிற்றுயிர்களுக்கு விடிவு வருமா? என்பது சந்தேகமே, அலைபேசி உலகம் பூராகவும் பணம் கொழிக்கும் தொழில், நாம் அனைவரும் அதற்கு அடிமையாகி விட்டோம்.அதற்கான இன்றைய சமுதாயம் எதையும் இழக்கத் தயார். அதுவும் நம் நாட்டில் வாய் பேசும் ஏழைக்கே மதிப்பில்லை. இந்த உயிர்களைப் பற்றியா சிந்திக்கப் போகிறார்கள்.
அதனால் இவர்கள் தங்களாலானதைச் செய்யட்டும், அவை வெற்றியளிக்க வேண்டுமென வாழ்த்துவோம்.
இங்கு என் வீட்டுமாடத்துக்கு ஒரு 5 - 6 சிட்டுக்கள் தினமும் வருகிறது.இன்று காலையும் வந்தன. சிறுது அரிசி இடுகிறோம். என்னாலானது.
குருவிகள் , நாம் நினத்துக் கூடுகட்டுவதில்லை. அவை விரும்பவேண்டும்.
உயிர்களை நேசிப்போருக்கு உரிய பதிவு.நன்றி!

Please prove you're not a robot -இதை நீக்கிவிடவும், மிக சிரமமாகவுள்ளது.






Anitha Manohar said...

நன்றி யோகன் அவர்களே. அலைபேசி கதிர்வீச்சைக் குறித்து நான் யோசித்ததில்லை. உங்கள் பதிவை படித்த்பின்புதான் பாவம் பேச திறனற்ற பறவைகள், விலங்கினங்கள் அதனால் பாதிக்கப்பட்டு வருவது வேதனைக்குறிய விடயம். சிட்டுக்குருவிகளின் மீதான உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன். சிறுவயதில் வீட்டுமுன்பாக சாணம் தெளிப்பது கிராமங்களில் வாடிக்கையான ஒன்று. அவ்வேளையில் சிட்டுக்குருவிகளும் ஒன்று சேர்ந்து அதிகாலையில் குரல் எழுப்பும். அதைக் கேட்டு மகிழ்ந்த காலங்கள் ரசனைக்குறியவை. நன்றி.

மாதேவி said...

.நல்லபகிர்வு . சிட்டுக்குருவிகள்தினவாழ்த்துகள்.!

சிட்டுக்குருவிகளைகாக்க ஜேசுராஜ், தனீஷ் எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துகின்றோம்.. வளர்க சிட்டுக்குருவிஇனம்..

Anitha Manohar said...

மாதேவி..தங்கள் வருகைக்கும், கருத்தூட்டத்திற்கும், வாழ்த்துக்கும் நன்றிகள்! சிட்டுகுருவிகளுக்கு அடைக்கலம் தந்து, வளரச்செய்வோம்!